3556. ஒண்டிறலி னான்முகனு மாலுமிக
       நேடிண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக
     நீண்டவர னாரதிடமாம்
கொண்டையிரை கொண்டுகெளி றாருட
     னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரையிளை
     யாடுமயி லாடுதுறையே.               9

     9. பொ-ரை: மிகுந்த வலிமையுடைய பிரனும், திருமாலும்
தேடியும் உணரமடியபவண்ணம், அகாயம்வரை அளாவி நெருப்புப்
பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
கொண்டைமீனை இரையாக உண்டு, கெளிறு, ஆரல் முதலிய
மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை, தண்ணீர்
அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும்
திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஒண்திறலின் - மிக்க வலிமையுடைய. நான்முகனும்,
மாலும், மிகநேடி - மிகவும்தேடி, உணராத வகையால் - அவர்கள்
அறியாத வண்ணம், அண்டமுற - ஆகாயமளயும், அங்கி உருவாகி
- நெருப்பின் வடிவாகி, (மிக நீண்ட) அரனாரது இடமாம் -
சிவபெருமானது இடமாகும். மடநாரை - இளம் நாரைகள்.
கொண்டை இரை கொண்டு - கொண்டை மீனை இரையாக உண்டு,
கெளிறு ஆர் உடன் இருந்து - கெளிற்று மீன்களோடும் ஆரல்
மீனக்ளோடும் இருந்து, கிளர் - விளங்குகின்ற, வாய்
- கரையினிடத்தில், அருதல்சேர் - தண்ணீர் அறுத்தலால்
உண்டாகிய. வண்டல் மணல் - வண்டல் மணலை. கெண்டி -
கிளறி - விளையாடும் மயிலாடுதுறை வாய் - ஆற்றோரம்
“காவிரியதன் வாய்க்கரை” என்ற சுந்தரமூர்த்திகள் தேவாரத்தாலும்
அறிக. (நமச்சிவாயத் திருப்பதிகம்) ஆற்றோரம்) ஆள்றோரம்
தண்ணீரறுக்காமல் கட்டப்படும் அணையை - வாய்க்கணை,
வாய்கணை. வாகணை என வழங்குப.