3560. அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ
       தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன்
     விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல்
     சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில்
     வைகாவிலே.                          2

     2. பொ-ரை: வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும்,
அக்கினியைக் கணையாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும்
கொண்டு, பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி
செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தாமரை
மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி, வயல்களில்
அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில்
இசைபாட, அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற
சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.

     கு - ரை: அண்டம் உறு - ஆகாயத்தை அளாவிய.
மேருவரை - மேருமலை (வில்). அங்கி - கணை. அக்கினி - அம்பு.
அரவு - (அது) பாம்பு. நாண்(ஆக) விண்டர்தம் - பகைவர்களாகிய
அசுரர்களின். எழில் ஆர்முப்புரம் - அழகிய திரிபுரங்களையும்.
எரித்த - எரியச் செய்த. விகிர்தன் - சிவபெருமான். (விரும்பும்
இடம்). வண்டு - வண்டுகள். புண்டரிக மாமலர்கள் புக்கு
விளையாடும் - சிறந்த தாமரை மலர்களில் புகுந்து விளையாடும்.
வயல் - வயல்களிலும். சூழ் - அவை சூழ்ந்த. தடம் -
தடாகங்களில் எல்லாம். இன்இசை பாட - இனிய சுதியைப்போல்
பாட. அழகு ஆர் குயில் - அழகு மிகுந்த குயில்கள். மிழற்று -
அவற்றிற்கேற்பப் பாடுவதைப் போலக் கூவுகின்ற. பொழில் -
சோலைகள் உடைய. (வைகாவிலே).