3563. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி
       யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ
     யொருவனிடமாம்
மேதகைய கேதகைள் புன்னையொடு ஞாழலவை
     மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில்
     வைகாவிலே.                         5

     5. பொ-ரை: வேதங்களை ஓதியும், ஓதுவித்தும், வேள்விகள்
பலசெய்தும், விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும், உணர்ந்தும்
உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ
அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
சிறந்த தாழைகள், புன்னை, புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும்,
மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள்
பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வேதமொடு - வேதத்தைக்கற்றதோடு, பலவாயின
வேள்வி - பலவாகிய யாகங்களையும், மிகுந்து - மிகச் செய்து, விதி
-விதிப்படி. ஆறு சமயம் - ஆறுசமய நூல்களையும், ஓதியும் -
கற்றும். (உணர்ந்தும்) உள - உள்ள. தேவர்தொழ - பூ
தேவர்களாகிய அந்தணர் (தொழ) மேதகைய - மேன்மை தங்கிய.
கேதகைகள் - தாழைகளும். புன்னையொடு ஞாழல் -
புன்னைமரத்தோடு புலிநகக் கொன்றைகளும். மிகுந்த அழகோடு
கூடிய. மாதவி - மாதவிக்கொடிகளும் (மணங்கமழ) வண்டு பல
பாடும் (சோலைசூழ்ந்த வைகாவில்).