3564. |
நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய |
|
ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர்
கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய
வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல்
வைகாவிலே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான் நஞ்சை அமுது போன்று
உட்கொண்டவன். நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன்.
சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய
தீபச்சுடருடன், பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப்
பொருளுணர்ந்தது உச்சரித்து, ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப்
பாடல்களைப் பாடி, எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு
மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும், வயல்வளமிக்க
திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
நஞ்சு - அமுதுசெய்த விடத்தை உண்டருளிய.
மணிகண்டன் - நீலகண்டனும், நமை - நம்மை. ஆளுடைய -
ஆளாகவுடைய. ஞானம் - முதல்வன். ஞானமே திருவுருவாகிய
முதல்வன். செஞ்சடையிடை - சிவந்த சடையினிடத்தில். புனல்கரந்த
- கங்கை நீரை ஒளித்த. சிவலோகன் - சிவலோக நாயகனுமாகிய
சிவபெருமான். அமர்கின்ற - தங்கும் (இடமாம்), அஞ்சுடரொடு -
அழகிய தீப முதலியவற்றுடன். ஆறுபதம்: - பஞ்சப்பிரம
மந்திரங்கள் ஐந்தையும், ஐந்தாகவும், அங்க மந்திரம் ஆறினையும்
ஒன்றாகவும் கொண்டு ஆறுபதம் என்றார். இதற்கு வேறு பொருள்
கூறுவாருமுளர். (பதம் - மந்திரம்) ஏழிசை - ஏழுசுரங்களோடு
பாடும் தோத்திரப் பாடல்களுடனும். எண்ணரிய வண்ணம் உளவாய்
- எண்ணமுடியாத விதம் உளவாக. மஞ்சரொடு - ஆடவர்களொடு
(மாதர் பலரும்) தொழுது - வணங்கி. சேரும் - அடைகின்ற
வயல்சூழ்ந்த திருவைகாவில் என்க. அஞ்சுடர் ... எண்ணரிய இவை
குறிப்பாக இலக்கங்களை யுணர்த்துகின்றன. அதனால் இவை
எண்ணலங்காரம் எனப்படும்.
|