3567. அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன்
       மாலுமிவர்கள்
எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ
     யீசனிடமாம்
சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு
     தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல்
     வைகாவிலே.                       9

     9. பொ-ரை: இவ்வுலக ஒடுக்கத்திற்கும், தோற்றத்திற்கும்
நிமித்த காரணனான சிவபெருமான், பிரமனும், திருமாலும் தங்கள்
செருக்கொழிந்து “எம் தந்தையே! தலைவனே! இறைவனே” என்று
தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்து வீற்றிருந்தருளும்
இடமாவது, சிந்தித்துப் பாடும் அடியார்களும், தன் மேனியிலே
திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும்
மலர்களை ஏந்தி, வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற,
நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும்.

     கு-ரை: அந்தம் (இறுதியாம் எவற்றிற்கும்) இறுதியானவனும்.
முதல் ஆதி - முதலாம் எவற்றிற்கும் முதலானவனும். பெருமான் -
பெருமையையுடையவனும். அமரர்கோனை - தேவர் தலைவனும்
ஆகிய இறைவனை. (அயனும் மாலும் இவர்கள்). எந்தைபெருமான்
- எமது தந்தையாகிய தலைவனே. இறைவன் - கடவுளே. (என்று
தொழ நின்று). அருள்செய் - அவர்களுக்கு அருள்புரியும் (ஈசன்
இடம் ஆம்) சிந்தை செய்து -சிந்தித்து. (பாடும் அடியார்களும்).
பொடி - திருநீற்றை. மெய்பூசி - உடம்பிற் பூசிக்கொண்டு.
எழுதொண்டர் - வருகின்ற தொண்டர்களும் வந்து - பல சந்தம்
மலர் - பலவித மலர்களைக் கொண்டு. முந்தி - ஒருவரின் ஒருவர்
முற்பட்டு. அணையும் - சேரும். பதி - தலம், நல்வைகாவில்.