3571. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
       யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள்
     வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல
     னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
     யேத்தவினை யகலுமிகவே.              2

     2. பொ-ரை: வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின்
ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை
தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட
கொடிகள் அசை செல்வ வளமிக்க திருமாகறல் என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற
அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும்,
வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில்
அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின்
திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.

     கு-ரை: கலையின் ஒலி - கலை கற்பவர்களின் ஒலியும்,
(மங்கையர்கள் பாடல் ஒலி. ஆடல் ஒலி ஆகிய இவ்வொலிகள்
சேர்ந்து) கவின் எய்தி - இனிமைதர. அழகு ஆர் மலையின் நிகர்
மாடம் - அழகு பொருந்திய மலையையொத்த மாடங்களில்.
உயர்நீள் கொடிகள் - மிக நீண்ட கொடிகள். வீசும் - வீசுகின்ற.
மலி - (செல்வ வளத்தால்) மிகுந்த. மாகறல் - உள்ளான். இலையின்
மலி - இலையைப் போன்ற வடிவையுடைய. வேல் - வேலையும்.
நுனைய - கூரிய நுனியையுடைய. சூலம் - சூலத்தையும். வலம்
ஏந்தி - வலக்கையில் ஏந்தி. எரிபுன்சடையினுள் - நெருப்புப்
போன்ற சிறிய சடையினுள். அலைகொள்புனல் - அலைகளையுடைய
கங்கைநீரை. ஏந்து பெருமான் - தரித்த சிவபெருமானது. அடியை
ஏத்த - திருவடிகளைத் துதிக்க. வினைமிக அகலும் - வினை
முற்றிலும் நீங்கும். இலையின் மலி: - உவமவாசகம் ஆகலால் இன்
என்பது சாரியை.