3574. துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி
       தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கண்ட
     மாடமலி மாகறலுளான்.
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
     வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
     யாரைநலி யாவினைகளே.           5

     5. பொ-ரை: நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள்
இருட்டில் இருட்டாய் இருந்து, இருள்நீங்கி விடிந்ததும் நிறம்
விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள்
தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள்
படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன.
இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில்
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்ச
முடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து
மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சை
யுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான
சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா.

     கு-ரை: இருள் நீங்க - விடிய. துஞ்சும் நறும் நீலம் -
குவியும் நறும் மணமுள்ள நீலோற்பலம், ஒளிதோன்றும் (கழனி)
இருட்டோடு இருளாய் இருந்த நீலோற்பலம். விடிந்ததும் நிறம்
விளங்கிக் காட்டுகிறது. (வரம்பில் பல பூக்கள் மலர்வதால்) மதுவார்
கழனி தேன் சொரியும் (கழனி) கழனிவாய் - கழனிக்கருகிலுள்ள.
மஞ்சமலி - மேகங்கள் படிந்த. பூம் பொழிலின் - மலர்ச்
சோலைகளில். மயில்கள் நடம் ஆடல் - மயில்கள் நடித்தல். மலி
- மிகுந்த. மாகறல் உ(ள்)ளான். வஞ்சம் - வஞ்சத்தையுடைய.
மதயானை - மதஞ்சொரியும் யானையின். உரி - தோலை, (போர்த்து
மகிழ்வான்). ஓர் - ஒப்பற்ற. மழுவாளன் - மழு யுதத்தையுடையவன்.
(வாள் சிறப்புப் பெயர், பொதுப் பெயர் குறித்தது). நஞ்சம் - நஞ்சம்
உண்டதினால். வளரும் இருள் - மிக்க இருளையுடைய. நாதன் -
தலைவனாகிய சிவபெருமானின், (அடியாரை). வினைநலியா -
வினைகள் துன்புறுத்தமாட்டா.