3576. வெய்யவினை நெறிகள்செல வந்தணையு
       மேல்வினைகள் விட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி
     மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
     தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை
     யாவினைக ளகலுமிகவே.          7

     7. பொ - ரை: கொடிய வினைகள் தாம் வந்த வழியே
செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய
வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும்
ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும்
வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில்
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின்
தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன்.
யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை
நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று
ஓடும்.

     கு-ரை: வெய்யவினை நெறிகள் செல - கொடிய வினைகள்
தாம் வந்த வழியே செல்லவும் - ‘வந்த வழியே செல்’ என்பது
உலக வழக்கு. வந்து அணையும் மேல் வினைகள் - ஆகாமியங்கள்
(பலவாய் ஈட்டப்படுவதால் பன்மையாற் கூறினார்.) வீட்டலுறுவீர் -
ஒழிக்கத் தொடங்குகின்றவர்களே. மைகொள் - மேகங்கள் படிந்த.
விரி - விரிந்த. கானல் - ஆற்றங்கரைச் சோலைகளின். மதுவார்
கழனி - தேன்மிகும் கழனிகளையுடைய. (மாகறல்) கானல்
இப்பொருளிலும் வருவதைச் “செங்கானல் வெண்குருகு பைங்கானல்
இரைதேரும் திருவையாறே” என்றருளிச் செயலால் அறிக.
(தி.1. ப.130. பா.3.)