3577. தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு
       தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க
     ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
     கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை
     நிற்றலில போகுமுடனே.          8

     8. பொ-ரை: பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்
பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத்
தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய
தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய
விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன்.
திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட
வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும்.

     கு-ரை: பொன்மாடம்மிசை - பொன்மயமான மாடங்களின்
மேல் கட்டிய. தூசு துகில் - வெள்ளாடையினாலாகிய. நீள்கொடிகள்
- நெடிய கொடிகளே. மேகமொடு - கரிய மேகத்தோடு. தோய்வன
- படிவனவாய். மாசுபடுசெய்கை - மாசுபடுசெய்கை மிக. பிற மாசுபடு
செய்கை இல்லாத - (மாகறல்) மிசையே. என்பதின் ஏகாரத்தைக்
கொடிகளோடு கூட்டுக. (மாதவர்கள்) ஓதி - வேதங்களை
ஓதிக்கொண்டு. மலி - திரள்கின்ற, மாகறல் உளான். பாசுபத
இச்சை - பாசுபத வேடத்தில் இச்சையையும். வரி - நெடிய.
நச்சரவு - (நஞ்சு + அரவு) விடப்பாம்பை. கச்சை உடை -
கச்சையாக உடுத்தலையும். பேணி - மேற்கொண்டவன், (இகரவிகுதி
ஆண்பாலில் வந்தது. உடை: (உடு+ஐ) உடுஐ - உடுத்தலை,
முதனிலைத் தொழிற்பெயர், அணிதல் என்னும் பொது வினையாற்
கூறற் பாலது. உடுத்தல் என வேறு வினையாற் கூறப்பட்டது. (அழகு
ஆர் பொடி பூசு ஈசன் என ஏத்த). வினை - வினைகள். இலபோகும்
- இல குறிப்பு முற்றெச்சம். பாசுபத வேடமாவது: - “சவந்தாங்கு
மயானத்துச் சாம்பல் என்பு, தலையோடு மயிர்க்கயிறு
தரித்தான்றன்னைப், பவந்தாங்கு பாசுபத வேடத்தானை” என்னும்
திருச்செங்காட்டங்குடித் திருத் தாண்டகத்தால் உணரப்படுவது.