3579. காலினல பைங்கழல்க ணீண்முடியின்
       மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி
     யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
     நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
     யாரையடை யாவினைகளே.     10

     10. பொ-ரை: பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை
அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும்
என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம்
நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில்
வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக்
கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும்,
அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள
சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.

     கு-ரை: காலின் - திருவடிகளில் அணிந்த. நல - நல்ல.
பைங்கழல் மேல் - பைம்பொன்னால் ஆன வீரகண்டையின்
மேலும். நீள் முடி - நீண்ட முடியின்மேல். சிரசின்மேல் அணிந்த
சந்திரன் முதலியவற்றின் மேலும். உணர்வு - அறிதலில்.
காமுறவினார் - விருப்பமுற்றவர்களாகிய. மாலும் மலரானும் -
திருமாலும், பிரமனும். அறியாமை - அறியாதபடி. எரியாகி -
நெருப்புப் பிழம்பாகி. உயர் - உயர்ந்த (திருமாகறலில் உள்ளவன்)
நாலும் எரி - சிரிப்பு, நெற்றிக்கண், கை, திருமேனிமுழுதும் ஆகிய
நாலிடத்தும் நெருப்பும். நாலும் - (அளவையாகுபெயர் ஏழாம்
வேற்றுமைத் தொகை.) உரியும் தோலும், சட்டையுரிக்கின்ற நாகமும்
ஆகிய இவற்றொடு பொருந்தி என்பது மூன்றாம் அடியின் பொருள்.
உரிநாகம் - வினைத்தொகை. ஆலும் - அசைந்து நடக்கும்
விடை.அடிகள் அடியாரையடையா வினைகளே - பெருமானின்
அடியாரை வினைகள் அடையா.