3580. கடைகொணெடு மாடமிக வோங்குகமழ்
       வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
     கூடுசம் பந்துனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின்
     மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
     தொல்வினைக ளொல்குமுடனே.     11

     11. பொ-ரை: வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட
மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில்
வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச்
சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய
தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக
நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப்
பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள்
நீங்கும்.

     கு-ரை: கடைகொள் - வாயில்களையுடைய. நெடுமாடம் -
நீண்ட மாடங்கள். மிக ஓங்கு - மிகவும் உயர்ந்த. கமழ்வீதி -
வாசனை கமழும் வீதிகள். மலி - மிகுந்த. காழியவர் - சீகாழியில்
உள்ளவர்களுக்கு. கோன் - தலைவனான (திருஞானசம்பந்தன்).
அரனை அடையும் வகையால் - சிவ பெருமானைச் சேர்வதற்குரிய
விதத்தால். பரவி - துதித்து. அடிகூடு - திருவடியைப்
பற்றுக்கோடாகச் சேர்ந்த (சம்பந்தன்). மடைகொள் - மடைகளில்
தேங்கிய தண்ணீர். ஓடும் - ஓடிப்பாய்கின்ற. வயல்களும். கூடு -
கூட்டமான. பொழில் - சோலைகளும் உடைய. மாகறல் உளான்.
தொல்வினைகள் - பழமையான வினைகள். ஒல்கும் - வலிகுறைந்து
நீங்கும்.