3581. பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
       பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழி்ல் காட்டிநிழல்
     கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
     மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
     காட்டிவினை வீடுமவரே.     1

     1. பொ-ரை: சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து
வேதப் பொருளாயும் விளங்குபவர். பிறைச்சந்திரனைச் சூடியவர். பல
வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு
பாகமாகக் கொண்டவர். மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால்
எரித்த வீர அழகைக் காட்டியவர். நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த
திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும்
நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றார். பாம்பைக் கச்சாகக் கட்டியவர்.
வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர்.

     கு-ரை: பாடல் மறை - பாடுவது வேதம். சூடல்மதி - சூடுவது
சந்திரன். ஓர்பாகம் - ஓர்பாகத்தில் (அமர்ந்திருப்பவர்). பல்வளை -
பல வளையல்களை அணிந்த உமாதேவியார். மதில் மூன்று -
திரிபுரங்களையும். ஓர் கணையால் - ஓர் அம்பினால். கூட எரியூட்டி
- ஒருசேர நெருப்பை உண்ணச்செய்து. எழில்காட்டி - தனது
வீரத்தின் அழகைக்காட்டி. (சிரித்துப் புரம் எரித்ததை) நிழல் கூட்டு
பொழில் - நிழலைத் தரும் சோலை சூழ்ந்த. பழசையுள் -
திருப்பழையாறையில். மாடம் மழபாடி - மாடங்களையுடைய
மழபாடியென்னும் பகுகதியில். உறை - தங்குகின்ற. பட்டிசரம்
மேய - திருப்பட்டீச்சரத்தில் எழுந்தருளியுள்ள. கடிகட்டு அரவினார்
- அரையில் கட்டிய பாம்பையுடையவர். வேடநிலைகொண்டவரை -
தமது வேடத்திற் கேற்ப ஒழுக்கத்தின் நிற்றலையுடைய அடியவரை.
வீடுநெறிகாட்டி - அடைதற்குரிய முத்தி மார்க்கத்தையும் அறிவித்து.
வினை வீடும் அவர் - அவர்களது கன்மங்கள் தாமே யொழியும்படி
செய்ய வல்லவராவர். பட்டீச்சரம் மே(வி)ய அரவினார் வினை
வீடுமவராவர் என்க. பழையாறை - பெரிய நகரமாயிருந்த இடம்.
இப்பொழுது அதன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பெயர்களால்
வழங்குகின்றது. பட்டீச்சரம் என இன்று வழங்குவர். சம்பந்தப்
பெருமான் காலத்தில் இவ்வூர் மழபாடியென வழங்கப்பட்டது. மழ
நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையிலுள்ள மழபாடி என்னும்
தலம் வேறு. கடி - இடக்கரடக்கல்.