| 3583.  | 
          காலைமட வார்கள்புன லாடுவது | 
         
         
          |   | 
               கௌவைகடி யார்மறுகெலாம் 
		மாலைமண நாறுபழை யாறைமழ 
			     பாடியழ காயமலிசீர்ப் 
		பாலையன நீறுபுனை மார்பனுறை 
			     பட்டிசர மேபரவுவார் 
		மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி 
			     விண்ணுலக மாளுமவரே.     3 | 
         
       
           3. 
        பொ-ரை: பெண்கள் காலையில் நீர்நிலைகளில்  
        நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய், மாலையில் பூசை  
        செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள  
        திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில்,  
        தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற  
        திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான்  
        வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை  
        வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக, மறுமையில்  
        விண்ணுலகை ஆள்வர். 
            கு-ரை: 
        காலை மடவார்கள் புனலாடுவது கௌவை - காலை 
        வேளையில் தண்ணீர்த்துறைகளில் மகளிர் நீராடுவதால் உண்டாகும்  
        ஓசையும். மாலை - மாலைவேளையில். கடி ஆர் - புதுமை மிகுந்த,  
        மறுகு எலாம் - வீதிகளில் எல்லாம். மணம் நாறும் - மணம்  
        மணக்கும் (ஓசையும் மணமும் என இருபுலன்களின் இனிமை கூறவே,  
        ஏனையமூன்றும்: கண்ணுக்கினிய காட்சியும் வாய்க்கினிய சுவையும்,  
        தென்றற்காற்றால் உடற்கினிய ஊறும் எக்காலத்தும் எவ்விடத்தும்  
        நுகர்வர் எனப் (பதிவளம் குறிப்பித்தவாறு). பழையாறை மழபாடி  
        - பழையாறை என்னுந் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில்.  
        அழகாய - அழகாகிய. மலிசீர் - மிக்க சிறப்புடைய, பாலையன  
        நீறுபுனை பாலையொத்த திருநீற்றை யணிந்த, மார்பனுறை பட்டி 
        சரமே பரவுவார் - மார்பினை உடையவராகிய சிவபெருமான்  
        தங்கும் பட்டீச்சரம் என்னும் கோயிலைத் துதிப்போர் (இம்மையில்  
        மேலை மேன்மை தருவனவாகிய செல்வங்கள்) மால்கடல்கள்போல்  
        பெருகி - வளரப்பெற்று (மறுமையில்) விண்ணுலகம் -  
        சொர்க்கலோகத்தை. (ஆளுமவர்) தொன்மை - தொல்லை யென்று  
        வருவதுபோல், மேன்மை - மேலையென்றாகிப் பண்பாகுபெயராய்ச்  
        செல்வத்தை யுணர்த்தி நின்றது. 
	 |