3584. கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக
       மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
     வாடவல பான்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
     பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழுமிமை யோரொடுட
     னாதலது மேவலெளிதே.              4

     4. பொ-ரை: சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த,
அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில்
தாங்கியவன். அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப்
பாடவும், ஆடவும் வல்லவன். பால் போன்ற வெண்ணிறச்
சந்திரனைச் சூடியவன். அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற
பெருமையுடைய திருமழபாடி என்னும் தலத்தில் திருப்பட்டீச்சரம்
என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். அவனைப்
போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன்
வாழ்வது எளிதாகும்.

     கு-ரை: கண்ணின்மிசை - தமது கண்களின் இடத்தில். நண்ணி
- (உமாதேவியாரின் கரங்கள்) சேர்ந்து (மறைத்ததால் அக்கரங்களின்
அரும்பிய வியர்வை நீர்) முகம் - (பரவிய) ஆயிர முகங்களையும்.
இழிவிப்ப - ஓர் திவலையாகச் சிறுகுவித்துச் சடையின் ஓர்
உரோமத்தில் தாங்க. ஏத்து - (அதன் பிரவாகத்தால் உலக
மழியாமைக் காத்தருளிய திறனைப் பிரமன் முதலியோர்)
துதிக்கப்பெற்ற (செஞ்சடையினான்). கமழ் - (அடியார் புனைந்த
மாலைகளால்) மணம் வீசும்; செஞ்சடையினான். பண்ணின் மிசை
- இசைவழியே பொருந்தி. பலபாணிபட - பல தாள ஒத்துக்களும்
பொருந்த. ஆடவல - ஆடவல்ல. பான்மதியினான் - வெண்மையான
சந்திரனை அணிந்தவன். மண்ணின்மிசை நேர் இல் - பூமியில்
தனக்குச் சமானமில்லாத. மழபாடி - மழபாடி என்னுந் தலத்தில்.
மலி - தங்கிய. பட்டிசரமே மருவுவார் - பட்டீச்சரத்தையே பற்றாக
அடைவோர். விண்ணின்மிசை வாழுமிமையோரொடு உடன் ஆதல்
அது - வான் உலகில் வாழும் தேவருடன் வாழ்வதாகிய
அத்தகைமை. மேவல் - அடைவது. எளிது - அவர்களுக்கு ஓர்
அரியதன்று. அதனினும் மிக்க சிவலோகத்தில் வாழ்வர் என்பது
குறிப்பெச்சம்.