3585. மருவமுழ வதிரமழ பாடிமலி
       மத்தவிழ வார்க்கவரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
     மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
     யஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கடொழ வுள்ளமுடை
     யாரையடை யாவினைகளே.     5

     5. பொ - ரை: முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து
ஒலிக்க, திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும்,
விழாக்களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது. மலை
உள்ளதால் பருவகாலத்தில் மழை பொழிய, வளம் மிகுந்து,
கண்டவர் மனத்தைக் கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும்
திருக்கோயிலில் படர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் அஞ்சத்தக்க மதயானையின்
தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப் போர்த்துக் கொண்டவன்.
வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன். நெருப்புப்
போன்ற சிவந்த திருமேனியுடைய அச்சிவபெருமானின் திருவடிகளை
உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம்
சாராது.

     கு-ரை: மரு(வு)வ - பொருந்தியனவாகிய, முழவு - முழவு
முதலிய வாச்சியங்களோடு மலி மத்தம் - விழாக்களியாட்டுக்கள்
மிகுந்த. விழவு - உற்சவத்தால் எழும் ஓசைகள். ஆர்க்க -
ஆரவாரிக்க. வரை ஆர் - மலையின் கண்தங்கிப் பொழிகின்ற.
பருவம் மழை - பருவகாலத்திற் பெய்யும் மழையால் உண்டாகிய.
பண்(பு) - வளங்கள். கவர்செய் - கண்டார் மனத்தைக் கவர்கின்ற,
(பட்டீச்சரம் மே(வி)ய, படர்ந்த) புன்சடையினான் -
புன்சடைகளையுடையவனும். விடையினான் - விடையையுடையவனும்
எனக்கூட்டுக. அனைவரும் அஞ்சுமாறு யானைத்தோலைப்
போர்த்து அக்கோலத்தோடே உமாதேவியாரும் அஞ்ச அவர்
முன்வந்த விடையினான். அவனது உருவம் நெருப்பு, அவனது
கழல் தொழுவாரை வினைகள் அடையா என்பது
பின்னிரண்டடிகளின் கருத்து. மருவு - உகரச் சாரியை தொக்கு
நின்றது. மரூஉ எனினும் ஆம், பண்பு - பண் எனக் கடைக்
குறையாயிற்று. கவர்தலுக்குச் செயப்படுபொருள்
வருவித்துரைக்கப்பட்டது.