3586. |
மறையினொலி கீதமொடு பாடுவன |
|
பூதமடி
மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டமமர்
பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுன றோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையி னேத்துமவர்
தீத்தொழில்க ளில்லர்மிகவே. 6 |
6.
பொ-ரை: வேதங்கள் ஓதும் ஒலியும், கீதங்கள் பாடும்
ஒலியும், பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும்
கலந்து ஒலிக்க, பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத்
திருநடனம் புரியும் சிவபெருமான் திருப்பட்டீச்சரம் என்னும்
கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். குளிர்ச்சி பொருந்திய
சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய
நிலையான தோற்றப் பொலிவு உடையவன். அத்தகைய இறைவனின்
திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள்
துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்.
கு-ரை:
மறையின் ஒலி - வேதங்களின் ஓசையும், பூதம்
அடிமருவி - பூதகணங்கள் அடியின் கீழ்ப் பொருந்தி. கீதமொடு -
கீதத்தோடும், பாடுவன - பாடப்படுவனதாகிய. (ஒலி) - ஓசையும்.
விரவு ஆர் - கலத்தலையுடைய. பறையின் - முழவ
வாத்தியங்களின். ஒலிபெருக - ஓசையும் பெருகும்படியாக. நிகழ்
நட்டம் அமர் - பொருந்திய நடனமாடுகின்ற, பட்டிசரமேய -
பட்டீச்சரம் என்னும் ஆலயத்தில் தங்கிய. பனிகூர் - குளிர்ச்சி
பொருந்திய. பிறையின்ஓடு - சந்திரனுடனே. மருவியது -
பொருந்தியதாகிய. சடையின் இடை - சடையில். புனல் ஏற்ற -
கங்கை நீரை ஏற்ற. தோற்றம் - தோற்றப் பொலிவு. நிலையாம்
- நிலையாகவுள்ள. இறைவனடி - கடவுளின் திருவடிகளை, முறை
- நாடோறும். முறையில் ஏத்தும் அவர் - முறைமையோடு
துதிப்போர். தீத்தொழில்கள் இல்லர் மிகவே - துன்புறும் வினைகள்
முற்றிலுமிலராவர்.
|