3587. பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை
       யோருலகு பேணலுறுவார்
துறவியெனு முள்ளமுடை யார்கள்கொடி
     வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு
     வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
     பாடுமற வாதவவரே.              7

     7. பொ-ரை: பிறவியாகிய நோயும், மூப்பும் நீங்கித்
தேவலோகத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும்,
உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற,
கொடி அசைகின்ற வீதிகளையுடைய திருப்பட்டீச்சரம் என்னும்
திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். அக்கோயிலைப் போற்றி வணங்குபவர்கள்
வினை சிறிதும் இல்லாதவராகி, தேன் ஒழுகுகின்ற நறுமணம் கமழும்
மலர்களாலும், தோத்திரங்களாலும் சிவனை வழிபட
மறவாதவர்களாவர். அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது
குறிப்பு.

     கு-ரை: பிறவி பிணி மூப்பினொடு நீங்கி - பிறவித்துன்பமும்,
அதில் அடையக்கூடிய பிணியும், மூப்பும் ஒழிந்து. இமையோர்
உலகு பேணலுறுவார் - தேவர் உலகமும் பாராட்டி எதிர்கொண்டு
அழைக்கும் தன்மை உள்ளவராவார்கள். துறவி என்னும் உள்ளம்
உடையார்கள் - துறத்தலாகிய உள்ளமுடைய மெய்யடியார்கள்.
(தங்கிய) கொடிவீதி - கொடிகட்டியவீதியும். அழகாயதொருசீர் -
அழகுடைய பொருள்கள் எல்லாம் வந்து தொகும் சிறப்பையுடைய.
இறைவன் உறை பட்டிசரமே - தலைவன் தங்கியிருக்கும்
பட்டீச்சரமே. ஏத்தி எழுவர் - துதித்துத் துயில் எழுபவர்.
வினையேதும் இலராய் - வினைசிறிதும் இல்லாதவராகி, நறவம் -
தேன் ஒழுகுகின்ற. விரையாலும் - வாசனைபொருந்திய
மலர்களாலும். மொழியாலும் - தோத்திரங்களாலும். (வழிபாடுமறவாத)
அவர் - சிவன்; உலகில் சிவகணத்தவரோடு உறைபவராவர்
என்பது குறிப்பெச்சம்.