3592. காடுபயில் வீடுமுடை யோடுகலன்
       மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
     வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி
     கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ்
     மாடமிடை தேவூரதுவே.             1

     1. பொ-ரை: சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும்.
முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும்.
அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும்
பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச்
செய்த வேதப்பொருளாக விளங்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட,
வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய
இளம் பெண் அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு
ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த
திருத்தேவூர் என்பதாகும்.

     கு-ரை: பயில் வீடு - தங்கும் வீடு. காடு - மயானம்.
கலன் - உண்கலம். முடைஓடு - முடை நாற்றம் பொருந்திய
மண்டையோடு. மூடும் - அரையை மூடும். உடை ஆடை
- உடுத்துக் கொள்வதாகியஆடை. புலி தோல் - புலித்தோல்.
ஊண் - உணவு. தேடுபலி - தேடியுண்ணும் பிச்சை. உடை
வேடம்மிகு - இவற்றையுடைய கோலம் மிக்க. வேதியர் -
வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானது. திருந்துபதியாம் -
திருத்தமான தலமாகும் (சோலைகளில்). மஞ்ஞை நாடகம் அது
ஆட - மயில் நாட்டியம் ஆட. அரி - வண்டுகள். பாட -
இசைபாட. கோடல் - காந்தள்கள். கைமறிப்ப - கரக்கம்பஞ்
செய்ய. நலமார் - அழகுடைய. சேடுமிகு - இளமை மிக்க.
பேடை அனம் - பெண் அன்னம் போன்ற மகளிர். ஊடி -
ஆடவரோடு பிணங்கி மகிழ் - அவர்கள் பிணக்கு நீக்குவதால்
மகிழ்கின்ற. மாடம்மிடை - மாடங்கள் நெருங்கிய (தேவூர் அதுவே)
அன்னம் - உவம ஆகுபெயர்.