| 
         
          | 3593. | கோளரவு கொன்றைநகு வெண்டலையெ |   
          |  | ருக்குவனி 
            கொக்கிறகொடும் வாளரவு தண்சலம கட்குலவு
 செஞ்சடைவ ரத்திறைவனூர்
 வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
 குங்குமம் விரைக்குமணமார்
 தேளரவு தென்றறெரு வெங்குநிறை
 வொன்றிவரு தேவூரதுவே.           2
 |  
            2. 
        பொ-ரை: கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி
 பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை
 குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
 தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு
 கூடிய இள மங்கையர்கட்குக் குங்கும குழம்பின் மணத்தை
 அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த
 மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற
 தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து
 பெருகும் திருத்தேவூர் ஆகும்.
       கு-ரை: 
        கோள் அரவு - கொலைத் தொழிலையுடைய பாம்பு. (கொன்றை). நகுவெண்டலை - சிரிக்கும் வெண்டலை. (எருக்கு)
 வன்னி - வன்னியிலை. (கொக்கு இறகொடும்) வாள் அரவும் -
 ஒளிபொருந்திய பாம்பும்; தண் சல மகள் - குளிர்ச்சி பொருந்திய
 கங்காதேவியும். குலவு - குலவுகின்ற (செஞ்சடை) வரத்து - வளர்
 தலையுடைய. (இறைவன் ஊர்). வேள் அரவு - விரும்புதல்
 பொருந்திய (கொங்கை). இளமங்கையர்கள் - (கணவரோடு கூடிய)
 இளம் பெண்களின். குங்குமம் விரைக்கு - குங்குமக் குழம்பின்
 வாசனைக்கு. மணமார் - மேலும் மணத்தைத் தருகின்ற
 (தென்றல்பிரிந்த மகளிர்க்கு) தேள் அரவு - தேள்
 கொட்டுவதைப்போல் மோதுகின்ற (தென்றல் தெருவெங்கும்) நிறைவு
 ஒன்றி - நிறைந்து. வரு தேவூர் அதுவே. தென்றல் காற்று
 கணவரொடு கூடிய மகளிர்க்கு, பலமலர்களிற் படிந்து கொணர்ந்த
 வாசனையை வீசி இன்பஞ் செய்கின்றதென்றும், பிரிந்த மகளிர்க்குத்
 தேள் கொட்டுவதுபோல் துன்பஞ் செய்கின்றதென்றும் கூறியவாறு.
 கொங்கையிள மங்கையர் என்று கூறப்பட்டிருப்பினும், மங்கையர்
 கொங்கையெனப் பொருள் கொள்ளல் நேர். வேள் அரவு -
 தொழிற்பெயர், தோற்று தேற்று என்னும் பகுதிகளில் தல் விகுதிக்குப்
 பதில் அரவு என்னும் தொழிற்பெயர் விகுதி வந்து தோற்றரவு
 தேற்றரவு என்றாதற்போல, வேள் + தல் வேட்டல்.
 தல்விகுதிக்குப்பதில், அரவு நின்று, வேளரவு என்றாயிற்று.
 |