3594. |
பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை |
|
பங்கனெமை
யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ
லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற
வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு
வொன்றிவளர் தேவூரதுவே. 3 |
3.
பொ - ரை: பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப்
பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள்
தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம்,
வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும்
மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய
உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும்
திருத்தேவூர் ஆகும்.
கு-ரை:
பண் தடவு - பண்ணின் இனிமை பொருந்திய
(சொல்லின்) மலைவல்லி உமை - மலையின் மகளாகிய
உமாதேவியாரை. பங்கன் - ஒரு பங்கில் உடையவனும். எமை -
எம்மை (ஆளும் இறைவன்) எண் தடவு - எண்ணத்தக்க. வானவர்
- தேவர்கள். இறைஞ்சு கழலோன் - வணங்கும்
திருவடியையுடையோனுமாகிய சிவபெருமான். இனிது இருந்த இடம்
- மகிழ்வோடிருந்த இடம். விண்தடவுவார் பொழில் - ஆகாயத்தை
அளாவிய நெடிய சோலைகள். உகுந்த - சொரிந்த. நறவு ஆடி -
தேனில் மூழ்கியும். மலர் சூடி - மலர்களை அணிந்தும். விரை ஆர்
-இவற்றால் வாசனைமிகுந்த. சேண்தடவு - ஆகாயமளாவிய.
மாளிகை - மாளிகைகள். செறிந்து - நெருங்கி. திருஒன்றி -
லக்ஷ்மிகரம் பொருந்தி (வளர் தேவூர் அதுவே) மாளிகைகளைச்
சூழப் பூஞ்சோலைகள் உள்ளன. காற்று வீசுவதால் பூந்தேனும்
பூக்களும் அவற்றில் வீசப்படுகின்றன. அதனால் அம்மாளிகைகள்
(நீரில் மூழ்கி மலர் சூடிவரும் மாதர்கள் போலத்தாங்களும்) தேனில்
மூழ்கி மலர்சூடி நிற்பன போற் காணப்படுகின்றன. அவற்றால்
வாசனையும் உடையனவாகக் காணப்படுகின்றன வென்பது
பின்னிரண்டடிகளின் கருத்து. சேண் என்பது செண் என எதுகை
நோக்கிக் குறுக்கல் விகாரம் பெற்றது.
|