3596. |
கானமுறு மான்மறிய னானையுரி |
|
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே. 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற
மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப்
போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம்
செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை
மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய
திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய
மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய
வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும்.
கு-ரை:
கானம் உறும் - காட்டில் வாழும். மான்மறியன் -
மான்கன்றை ஏந்தியவன். யானை உரிபோர்வை - யானைத்
தோலாகிய போர்வையோடு. கனல் ஆடல் புரிவோன் - நெருப்பில்
ஆடுபவன். ஏனஎயிறு - பன்றியின் கொம்பும். ஆமை -
ஆமையோடும். இளநாகம் - இளம் பாம்புகளும். வளர் -
பொருந்துகின்ற. மார்பின் - மார்பையுடைய (இமையோர் தலைவன்)
ஊர் - (தேவர்கள் நாயகனாகிய சிவ பெருமானின்) தலம். வான்
அணவு சூதம் - ஆகாயத்தை அளாவிய மாமரங்களும். (வாழை,
மகிழ், மாதவி, பலா முதலிய மரங்களும்) நிலவி - தழைத்து.
வார்தேன் அமுது உண்டு - சொரிகின்ற தேனாகிய உணவை உண்டு.
வரிவண்டு இசைபாடும் வண்டுகள். மருள் - அந்தக்
காலத்திற்குரியதல்லாத பண்ணை (தேன் உண்ட மயக்கத்தால்) பாடி
வரு(ம்) தேவூர் அதுவே. மருள் - மருள்தல் தொழிலாகுபெயர். வளர்
என்பது இங்குப் பொருந்திய என்னும் பொருள் தந்து நின்றது.
வண்டு மருள் பாடி என்பதனை மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தனர் என்னும்
செய்தியிலும் காண்க. (புறநானூறு - 149.)
|