3597. |
ஆறினொடு கீறுமதி யேறுசடை |
|
 யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
 நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர்
 வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள
 வாளைவரு தேவூரதுவே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான் சடையிலே கங்கையோடு,
பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன்.
கோபம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின்
முப்புரங்களை எரித்துச் சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில்
திருநீற்றைப் பூசியவன். நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான மலர்களிலிருந்து ஊறும் தேன்
வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த, கயல்மீன்கள் விளையாட
அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற திருத்தேவூர் என்பதாகும்.
கு
- ரை: ஆறினொடு - கங்காநதியுடனே. கீறுமதி - பிறைச்
சந்திரனும், ஏறு - ஏறியுள்ள. சடை - சடையையுடைய, ஏறன் -
இடப வாகனத்தையுடையவனும், சீறும் அவை - (தேவர்
முதலியோரை) சீறி அழிப்பனவாகிய. அடையார் நகர்கள் -
பகைவர்களின் முப்புரங்களையும், வேறுபட நீறுசெய்த -
அழியும்படியாக எரித்து. நீறன் - திரு நீற்றைப் பூசியருளியவனும்
(ஆகிய) நமையாளும் அரன் - நம்மை யாட்கொள்ளும்
சிவபெருமானின் (ஊர்) வீறுமலர் ஊறும் மது - செழித்த மலரில்
ஊறிவடிகின்ற தேன் வெள்ளமானது. ஏறி - பாய்ந்து. வளர்வாய
- விளைகின்ற. கழனி - வயல்களின். சேறுபடு - சேற்றிலுள்ள,
செங்கயல் விளிப்ப - செவ்விய கயல்மீன்கள் (தம்மோடு
விளையாடக்) கூப்பிட. இளவாளைவரு - இளமை பொருந்திய
வாளைமீன்கள் வரும் (தேவூரதுவே.)
|