3598. கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர
       மன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன
     தந்தையம ரின்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிக
     டின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை
     யாடிவளர் தேவூரதுவே.                 7

     7. பொ-ரை: கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற
பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான்
சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய
பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய
அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது,
வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப்
பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர்
ஆகும்.

     கு-ரை: கன்றி எழ - கோபித்து (உலகை அழிக்கக் கிளம்ப)
வெனறி நிகழ் - வெற்றிபெற்ற. துன்று - நெருங்கிய. புரம் -
திரிபுரங்களையும். அன்று அவிய - அக்காலத்தில் அழியும்படி.
நின்று நகை செய் - நின்று சிரித்த. என்தனது - என்னுடைய.
சென்று நிலை - சென்று (அடையக் கூடிய) பற்றுக்கோடும். எந்தை
தனதந்தை - என் தந்தைக்குத் தந்தையுமாகிய சிவபெருமான். அமர்
- விரும்பும். இன்பநகர் - இன்பகரமான தலம். கறவைக் குருளைகள்
- கறவைப் பசுக்களின் கன்றுகள். சென்று - போய். முன்றின்மிசை
நின்ற - வீட்டின் முன்னால் நின்ற. (பலவின் கனிகள் தின்று)
இசைய நின்று - பொருந்த நின்று, ஒன்று - ஒரசேர. து(ள்)ளி
விளையாடி - துள்ளி விளையாடி. வளர் - வளர்கின்ற (தேவூர்
அதுவே.)