3602. |
துங்கமிகு பொங்கரவு தங்குசடை |
|
நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு
பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
வல்லவர்கள் சங்கையிலரே. 11 |
11.
பொ-ரை: நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச்
சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான்.
அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற
கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம்
திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு
செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் பத்தையும் அடியார்
கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.
கு-ரை:
துங்கம் மிகு - உயர்ச்சி மிகுந்த. பொங்கு அரவு -
மிகுந்த பாம்புகள். தங்கு - தங்குகின்ற. சடை - சடையையுடைய.
நங்கள் இறை - எங்கள் தலைவனும். துன்று - அடர்ந்த. குழல்
ஆர் - கூந்தலையுடைய. செங்கயல்கண் - செவ்விய மீன்போன்ற
கண்களையுடைய. மங்கை - பெண்ணாகிய. உமைநங்கை -
உமாதேவியார். ஒருபங்கன் - ஒரு பாகமாக உடைய சிவபெருமான்.
அமர் - விரும்புகின்ற. (தேவூர் அதன் மேல்) பைங்கமலம் - பசிய
தாமரை மலர்கள். அணிகொள் - அழகைச் செய்கின்ற. திண்புகலி
- வலிய சீகாழியில் (அவதரித்த, ஞானசம்பந்தன்.) உரைசெய் -
பாடிய. சங்கம் மலி - அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய.
(செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்) சங்கை இலர் -
குற்றமற்றவர் ஆவர்.
|