3606. கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
       கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
     பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது
     வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர்
     தத்தைபயில் சண்பைநகரே.     4

     4. பொ-ரை: முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, வைத்த
பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத்
திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து,
சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற
உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, எப்போதும்
உண்மையே பேசுகின்ற, அறுபத்து நான்கு கலைகளையும்
பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை, சந்திரனொளி நுழைய
முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில்
வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும்
திருச்சண்பை நகராகும்.

     கு-ரை: முழவுகொட்ட - வாத்தியங்கள் அடிக்க. இட்ட -
வைத்த. அடி - பாதங்கள். வட்டணைகள் கட்ட - வட்டணை
என்னும் நாட்டிய வகைகளைச் செய்ய. நடமாடி - நடனமாடும்
சிவபெருமான். குலவும் - விளங்கும். பட்டம் - பட்டத்தை.
நுதல்கட்டு - நெற்றியில் அணிந்த. மலர் - சூடியமலர் மாலைகளின்.
மட்டு - வாசனை. மலி - மிகுந்த. பாவையொடு - பதுமைபோன்ற
உமாதேவியுடன். மேவுபதி - தங்கும்தலம். தமது வாய்மை வழுவாத
- தமது உண்மை தவறாத. மொழியார் - வார்த்தைகளையுடைய
கற்றோர்களின். சட்ட - முறையான். கலை எட்டும் மருவெட்டும்
- கலைகள் அறுபத்து நான்கையும். வட்டமதி - வட்டமான சந்திரன்.
தட்ட - தடுக்கப்பட்ட. பொழிலுள் - சோலையிலே. வளர் -
வளர்கின்ற. தத்தை - கிளிகள். பயில் - சொல்லும் (சண்பைநகர்)
சட்டகலை... ...பயில் என்பது வீறுகோள் அணி.