3608. |
பாலனுயிர் மேலணவு காலனுயிர் |
|
பாறவுதை
செய்தபரமன்
ஆலுமயில் போலியலி யாயிழைத
னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கிண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள
நீலம்வளர் சண்பைநகரே. 6 |
6.
பொ-ரை: பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர
வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன், ஆடுகின்ற மயில்
போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த
ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
தலமாவது, ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த
சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி,
தேனைக்குடித்து இசைபாட, அழகிய மீன்கள் துள்ளிப்பாய, நீலோற்
பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும்.
கு-ரை:
பாலன் உயிர்மேல் அணவுகாலன் உயிர்பாற -
மார்க்கண்டேயனது உயிர்மேற் சென்ற யமன் உயிர் நீங்க. உதை
செய்த பரமன் - உதைத்த மேம்மையுடையவனும். ஆலும் -
ஆடுகின்ற. மயில் போல் - மயில்போன்ற. இயலி -
சாயலையுடையவராகிய, ஆயிழைதனோடும் - ஆராய்ந்த
ஆபரணத்தையணிந்த உமாதேவியாரோடும். அமர்வு எய்துமிடம்
- தங்குதல் பொருந்திய தலம்.
ஏலம் மலி சோலை
- ஏலம் முதலிய ஓடதி வர்க்கங்கள்
மிகுந்த சோலையிலே. இளவண்டு - இளம் வண்டுகள். மலர்கிண்டி
- மலரைக் கிளறி. நறவு உண்டு - தேனைக் குடித்து. இசை செய
- பாட. சாலிவயல் - நெல் விளைந்த வயல்களிலே. கோலமலி -
அழகுபொருந்திய. சேலுகள - மீன்கள் துள்ளிப்பாய. நீலம் வளர்
- நீலோற்பலங்கள் செழிக்கின்ற (சண்பை நகரே).
செய்யஉகள என்பன
காரணகாரியப் பொருளின்றி வந்த
வினையெச்சங்கள். வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச்
கழுமலமே என்புழிப்போல். (தி.1.ப.129.பா.1.)
|