3617. நீறுதிரு மேனியின் மிசைத்தொளிபெ
       றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுக
     ரிச்சைய ரிருந்தபதியாம்
ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி
     தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறவிசை
     தேருமெழில் வேதவனமே.              4

     4. பொ-ரை: சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை
ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர்.
ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில்
இயற்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன்,
வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த
ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய
திருவேதவனம் ஆகும்.

     கு-ரை: நீறு - திருநீற்றை. திருமேனியின் மிசைத்து -
திருஉடம்பின் மேலதாய். ஒளிபெறத்தடவி - ஒளிபொருந்தப் பூசி.
(இடபமே ஏறி), உலகங்கள் தொறும் வந்து - ஊர்கள்தோறும்
சென்று. (உலகம் - முதல் ஆகுபெயர்). பிச்சை நுகர் இச்சையர் -
பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவராகிய சிவபெருமான்.
இருந்த பதி - இருக்கும் தலம். ஊறுபெருள் - பல கருத்துக்களைத்
தருகின்ற. இன்தமிழ் - (இனிய தமிழ்) மொழியில். இயல்கிளவி -
இயற்சொற்களை. தேரும் - இப்பொருட்கு இச்சொல் எனத் தேர்ந்து
பேசும். மடமாதருடன் - (இலை, காய், கறி, சிறுதின்பண்டம்,
சிற்றுண்டி முதலியன விற்கும்) இளம் பெண்களுடனே. ஆர் -
அங்கே. (வாணிகம் முதலிய வினை மேற்கொண்டு கப்பலில் வந்த).
வேறு திசை ஆடவர்கள் - வேறு திசைகளினின்றும் வந்த ஆண்கள். கூற - பேசுவதற்கு. இசை தேரும் - சொற்களைத் தெரிந்துகொள்ளும். எழில் ஆர் - அழகு மிக்க. வேதவனமே - இயற்கிளவி - இயற்
சொல். இசை - சொல்.