3619. மாலைமதி வாளரவு கொன்றைமலர்
 

     துன்றுசடை நின்றசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகை
     மடங்கவன லாடுமரனூர்
 சோலையின் மரங்க டொறு மிண்டியின
     வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற
     வங்கொணரும் வேதவனமே.            6

     6. பொ-ரை: மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளி
பொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச்
சுழன்று
புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண்
மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின்
ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள
மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய,
கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும்
சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மாலைமதி - மாலைக்காலத்தில் உதிக்கும் சந்திரனும்.
வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பும். (கொன்றை மலர்) துன்று -
நெருங்கிய (சடை). நின்று - தங்கி. சுழல - சுழன்று புரள. காலையில்
எழுந்த கதிர் - உதய சூரியனும். தாரகை - விண் மீன்களும். மடங்க
- திருமேனிக்கும், திருநீற்றுப்பூச்சிற்கும் முறையே நிகராகாமல்
தோற்க, அனல் ஆடும் - தீயில் நின்று நடம் புரியும், (அரனது ஊர்).
சோலையில் - மரங்கள் தொறும். மிண்டி - நெருங்கி. இனவண்டு -
வண்டின் கூட்டங்கள். மது உண்டு - தேனைக் குடித்து. இசை
செ(ய்)ய - இராகம் பாட. வேலை - கடலினின்றும், ஒலிசங்கு -
ஒலிக்கும் சங்குகளையும், வங்க சுறவம் - கப்பல்களையுடைக்கும்
சுறாமீன்களையும், திரை - அலைகள் (கொணரும் வேதவனமே)
மாலைமதி, வங்கசுறவம் இவை உருபும் பயனும் தொக்க தொகைகள்.