3620. வஞ்சகம னத்தவுணர் வல்லரண
       மன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தவம ரர்க்கமர
     னாதிபெரு மானதிடமாம்
கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ்
     வாயவர்கள் பாடல்பயில
விஞ்சுக வியக்கர்முனி வக்கண
     நிறைந்துமிடை வேதவனமே.            7

     7. பொ-ரை: வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய
அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற்
கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள்
முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய
மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட,
வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும்
நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வஞ்சக மனத்து - வஞ்சகம் பொருந்திய
மனத்தையுடைய. அவுணர் - அசுரர்களின். வல் அரணம் - வலிய
(மூன்று) மதில்களையும். அம் சகம் - அழகிய உலகில். அவித்த -
ஒழித்த, அமரர்க்கு அமரன் - தேவதேவனாகிய. ஆதி பெருமானது
- முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானது. இடம் ஆம். கிஞ்சுக இதழ்
- முள் முருக்கம் பூவையொத்த உதடுகளில். கனிகள் ஊறிய -
இனிமையின் ஊற்றென்னும் படியான (சொற்களைப் பேசும்).
செவ்வாயவர் - சிவந்த வாயையுடைய பெண்கள். பாடல் பயில -
பாட. விஞ்சு சுகம் - (வியப்பு) மிக்க மனத்தையுடைய. இயக்கர் -
இயக்ஷர்களும். முனிவக்கணம்(துறந்த) முனிவர்கூட்டமும். (அப்பாடலைக் கேட்க) நிறைந்துமிடை - நிறைந்து நெருங்குகின்ற.
(வேதவனமே) முனிவர்+கணம் - முனிவக்கணம் என்றாயிற்று.
வாணயித்தெரு. என்ற தொடரிற்போல, “சிலவிகாரமாம் உயர்திணை”
என்ற நன்னூல் விதிப்படி.