3621. முடித்தலைகள் பத்துடை முருட்டுரு
       வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை
     வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற மியற்றுதல்
     கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
     மல்குபதி வேதவனமே.                8

     8. பொ-ரை: கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய்,
முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன்
காற்பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக்
கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத்
துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய்,
புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக்
கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: முடி - கிரீடம். (தலைகள் பத்து உடைய) முருடு உரு
- முரட்டுத் தன்மைகாட்டும் உருவையுடைய (அரக்கனை விரலால்,
நெருக்கி அடித்து). முன் - அக்காலத்தில், அடித்தலம் -
பாதாளத்தில்.வைத்து - இருத்தி. அலமர - கலங்கும்படி. கருணை
வைத்தவன் - மறக்கருணை புரிந்தருளிய சிவபெருமானது. இடம் -
வாழும் இடம் (யாதெனில்) பல துயர் - (அதனால் விளையும்
பலவித துன்பங்களையும். கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதலில்)
கிளர்ந்து - முயற்சியுடையவர்களாய். புலவாணர் - புலமையால்
வாழ்பவர்களாகிய புலவர்களினின்றும். வறுமை - வறுமையை.
விடுத்தலை மதித்து - நீக்குதலை அழுத்தமாகக் கருதி. நிதி -
திரவியங்களை. நல்குமவர் - கொடுக்கும் கொடையாளிகள். மல்குபதி
- நிறைந்த தலமாம்.