| 
         
          | 3628. | மாசின்மதி 
            சூடுசடை மாமுடியர் |   
          |  | வல்லசுரர் 
            தொன்னகரமுன் நாசமது செய்துநல வானவர்க
 ளுக்கருள்செய் நம்பனிடமாம்
 வாசமலி மென்குழன் மடந்தையர்கண்
 மாளிகையின் மன்னியழகார்
 ஊசன்மிசை யேறியினி தாகவிசை
 பாடுதவி மாணிகுழியே.                5
 |       5. 
        பொ-ரை: சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை
 அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர்.
 அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய
 கூந்தலையுடைய பெண்கள், மாளிகைகளில் தங்கி அழகிய
 ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற
 திருமாணிகுழி ஆகும்.
       கு-ரை: 
        மாசுஇல்மதி - குற்றமில்லாத சந்திரனை. சூடு - அணிந்த. சடைமுடியர் - பெரிய சடாமுடியையுடையவர். வல் அசுரர்
 - வலிய அசுரர்களின். தொல்நகரம் - பழைய திரிபுரங்களை. முன் -
 அக்காலத்தில். நாசம் (அது) செய்து - அழித்து. (நல்வானவர்களுக்கு
 அருள் செய்). நம்பன் இடமாம் - சிவபெருமானின் இடமாம். வாசமலி
 - மணம் மிகுந்த. மென்குழல் மடந்தையர்கள் - மெல்லிய
 கூந்தலையுடைய மாதர்கள், மாளிகையின் மன்னி - மாளிகைகளில்
 தங்கி, அழகுஆர் - அழகு பொருந்திய. ஊசல்மிசை ஏறி - ஊசலின்
 மேல் (ஏறி உகைத்து). இனிதாக இசைபாடு - இனிமையுடையதாக
 ஊசற்பாட்டைப் பாடி (ஆடுகின்ற உதவிமாணி குழியே).
 |