3631. எண்ணமது வின்றியெழி லார்கைலை
       மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள்
     புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை
     முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன
     லாடுதவி மாணிகுழியே.               8

     8. பொ-ரை: கயிலைமலையின் பெருமையையும், சிவ
பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது, கயிலைமலையைப்
பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ்
நெரித்து, பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக
நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்
போன்று மென்மொழி பேசபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும்,
பவளம் போன்ற வாயையும், அழகிய ஒளிபொருந்திய
நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும்
திருமாணிகுழி ஆகும்.

     கு-ரை: எண்ணம் அது இன்றி - முன் யோசனை சிறிதும்
இல்லாமல் (துணிந்து) எழில்ஆர் - அழகு பொருந்திய. கயிலை மா
மலை - சிறந்த கயிலாயமலையை. எடுத்த - எடுக்கத் தொடங்கிய.
திண்ணிய - (இலேசில் அழிக்கமுடியாத) வலிமை வாய்ந்த. திறல்
ஆர் - திறமையுடைய. அரக்கனை - இராவணனை. நெரிந்து -
அடர்த்து (பின் அருள்புரிந்த.) சிவலோகன் - சிவலோகநாயகனாகிய
சிவபெருமானது. (இடம் ஆம்.) பண் அமரும் - இசை பொருந்திய.
மென்மொழியின் - மெல்லெனப் பேசும் சொற்களையும். ஆர் -
(அணிகலன்கள்) நிறைந்த. பணை - பருத்த. முலை - தன
ாரங்களையும். பவளவாய் - பவளம் போன்ற வாயையும். அழகு
(அது) ஆர் - அழகு பொருந்திய. ஒள் - ஒளிவாய்ந்த. நுதல் -
நெற்றியையுமுடைய (மடந்தையர்). குடைந்து புனல் ஆடு - (கையால்)
குடைந்து நீராடும், (உதவிமாணிகுழி).