3634. உந்திவரு தண்கெடில மோடுபுனல்
       சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி
     சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
     ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை
     யார்கணெடு வானநிலனே.              11

     11. பொ-ரை: பல பொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து
வரும் கெடிலநதி சூழ்ந்த உதவிமாணிகுழியின் மீது, மாலைக்காலப்
பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின்
திருவடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில்
அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட
முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.

     கு-ரை: உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு
வருகின்ற. தண் - குளிர்ச்சி பொருந்திய, கெடிலம் - கெடில நதியின்.
ஓடுபுனல் - ஓடும் தண்ணீர். சூழ் - சூழ்ந்த. (உதவிமாணி குழிமேல்.)
அந்திமதி சூடிய எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச்
சந்திரனை அணிந்த எம் தலைவனாகிய சிவபெருமானது. அடி -
திருவடிகளை, சேரும் - இடைவிடாது தியானிக்கும். அணி -
அழகிய. காழிநகரான் சீகாழியில் அவதரித்தருளியவரும். சந்தம்
நிறை - சந்தம் நிறைந்த. தண் தமிழ் - இனிய தமிழை. தெரிந்து
உணரும் - அறிந்து உணர்ந்த (ஞானசம்பந்தனது.) சொல் -
சொற்களாகிய இப்பதிகத்தை. முந்தி - முற்பட. இசை செய்து -
இசையைத் தொடங்கி. மொழிவார்கள் - பாடுவோர். நெடுவான
நிலன் - எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை, உடையார் -
உடைமையாகப் பெறுவர்.