3636. சொற்பிரிவி லாதமறை பாடிநட,
       மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந்
     நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு
     னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக
     ரென்பர்திரு வேதிகுடியே.              2

     2. பொ-ரை: சிவபெருமான் இசையும், சொல்லின்
மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவர். முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரியவல்ல
தோளில் இனிதாக அணிவார். நாள்தோறும் தேவர்கள் வணங்க,
உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர்.
பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை
ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம்
திருவேதிகுடி என்பதாம்.

     கு-ரை: சொல் பிரிவு இலாத - இசையோடு சொற்பிரியாத.
மறை - வேத கானத்தை. பாடி - பாடிக்கொண்டு. நடம் ஆடுவர் -
நடனம் ஆடுவர். தொல் - முதிர்ந்த. ஆனை - யானையின். உரிவை
- தோலை. மல் புரி புயத்து - மல் யுத்தம் புரியவல்ல தோளில்.
(எந்நாளும்) இனிது மேவுவர் - இனியதாக அணிவார். வளர் வானவர்
தொழ - அச்சம் மிகுந்த தேவர்கள் துதிக்க. துற்பு அரிய -
உண்ணுதற்கரிய, நஞ்சு அமுதமாக முன் அயின்றவர் - விடத்தை
அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர். தொகுசீர் இயன்ற -
பலவாற்றானும் தொக்க புகழ் பொருந்திய. வெற்பு அரையன் மங்கை
-மலை அரையன் மகளாகிய உமாதேவியாரை. ஒரு பங்கர் - ஒரு
பாகமாகக் கொண்டு அருளியவராகிய சிவபெருமானது, (நகர்
திருவேதிகுடியே) வேதபுருடனுக்குச் சந்தஸ் (இசை) பாதமாகக் கூறப்
படுவதால் பாதமின்றி நடைபெறாமை குறித்தற்குச் சொற்பிரியாத
என்பதற்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. மற்போர்
அருச்சுனனுடன் நடந்தது. தங்களுக்கு உயிர் அளித்தமை கருதி
வானவர் எந்நாளும் தொழ நஞ்சு அயின்றனரென வரலால் தொழ
என்பது காரியப் பொருட்டு. துற்று - உண்டி. துற்பு - உண்ணல்.
துன்(னுதல்) புதுற்பு என்றுகொண்டு. அண்டுதற்கரிய எனினும் ஆம்.
அயிலல் - உண்ணல்.