3637. போழுமதி பூணரவு கொன்றைமலர்
       துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு
     ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி
     நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
     யென்பர்திரு வேதிகுடியே.              3

     3. பொ-ரை: சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய
பிறைச்சந்திரனை அணிந்தவர். பாம்பு, கொன்றைமலர் இவற்றைச்
சடையிலணிந்த, அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு
வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர். விடம்
உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர். தேவ
லோகத்திலுள்ள மகளிரும், ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி
அவை தீர அருளை வேண்டுபவர். அழகிய மார்பில் முப்புரிநூல்
அணிந்தவர். புலித் தோலாடை அணிந்தவர். அதன் மேல்
யானைத்தோலைப் போர்த்தவர். அத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும்.

      கு-ரை: போழும் மதி - வட்டத்தைப் பிளந்தாலனைய
பிறைச்சந்திரன். பூண் - சுற்றிய. அரவு - பாம்பு. (கொன்றை மலர்
ஆகிய இவைகள்) துன்றுசடை - நெருங்கிய சடா மகுடத்தினின்றும்.
வென்றி புக - (பகீரதன் முயற்சிக்கு) வெற்றி உண்டாக. மேல் வாழு
நதி - அதன் மேல் தங்கிய கங்காநதியை. தாழும் - உலகிற்
பாயச்செய்த (அருளாளர்) இருளார் மிடறர் - கருமை பொருந்திய
கண்டத்தை யுடையவர். மாதர் இமையோர் - மாதர்களோடு கூடிய
தேவர்கள். சூழும் இரவாளர் - சுற்றி நின்று தங்கள் குறைகளை
வேண்டி இரக்கப்படுபவர். (திருமார்பில்) விரி நூலர் - ஒளி பரவிய
பூணூலை யுடையவர். வரி தோலர் - புலித்தோலுடையையுடையவர்.
மேல் - உடம்பின்மீது. வேழ உரி போர்வையினர் - யானைத்
தோலைப் போர்வையாகக் கொண்டருளியவர் (ஆகிய சிவபெருமான்)
மேவு பதி - தங்கும் தலம். வேதிகுடி என்பர் - திருவேதிகுடி என்பர்.