3638. காடர்கரி காலர்கனல் கையரனன்
       மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ
     ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல
     ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை
     மேவுதிரு வேதிகுடியே.                 4

     4. பொ-ரை: சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர்.
யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர்.
நெருப்பைக் கையில் ஏந்தியவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனி
உடையவர். தூய உடம்பினர். காதில் தோட்டை அணிந்தவர். கிழிந்த
ஆடை அணிந்தவர். சரிந்த கோவணத்தை அணிந்தவர். பசுவேறி
வரும் கோலத்தையுடையவர். அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும்
பழமையான நகரானது, தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால்
அபிடேகம் செய்து, மலரால் அர்ச்சித்து வணங்கி, சிவவேடத்தை
நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன்
விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: காடர் - மயானத்திலிருப்பவர் "கோயில் சுடுகாடு"
என்பது திருவாசகம். கரிகாலர் - யானைக்கு யமன் ஆனவர். கனல்
கையர் - நெருப்பைக் கையில் ஏந்தியவர். அனல் மெய்யர் -
நெருப்பே உடம்பாக உடையவர். உடல் செய்யர் - அதனால் மேனி
செந்நிறம் உடையவர். செவியில் தோடர் - காதில்
தோட்டையணிந்தவர். தெரிகீளர் - தெரிந்தெடுத்த கீளையுடையவர்.
சரிகோவணர் - சரிந்த கௌபீனத்தை அணிந்தவர். ஆவணவர் -
பசுவேறிவரும் கோலத்தையுடையவர் (ஆ - பசு; வண்ணம் -
கோலம்) தொல்லைநகர்தான் - சிவபெருமானின் பழமையான தலம்
ஆகிய. பாடல் உடையார்கள் அடியார்கள் - தோத்திரம் பாடுதலை
உடையவர்களாகிய அடியார்கள். மலரோடு புனல் கொண்டு -
மலரையும் தண்ணீரையும் கொண்டு. பணிவார் - வணங்குபவர்களாய்.
வேடம் - வேடத்திற்குரியதாகிய. ஒளியான - பிரகாசம் பொருந்திய.
பொடிபூசி - திருநீற்றை உத்தூளித்து. இசைமேவு - கீர்த்தியடைகின்ற
(திருவேதிகுடியே)