3644. |
வஞ்சமணர்
தேரர்மதி கேடர்த |
|
மனத்தறிவி
லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி
யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு
டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே. 10 |
10.
பொ-ரை: வஞ்சனையுடைய சமணர்களும், புத்தர்களும்
கெட்ட மதியுடையவர்கள். இறைவனை உணரும் அறிவில்லாத
அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக் கோடாகத் தக்கன என்று
எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று, அறுவகைச்
சமய நூற்பொருள்களை ஆராய்ந்து, ஏழுவகைச் சுரங்களால்
இசைப்பாடல்களைப் பாடி, கோபத்தை ஒழித்த அருளாளர்கள்
மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும்.
கு-ரை:
வஞ்ச அமணர் - வஞ்சனையை யுடைய
அமணர்களும். தேரர் - புத்தர்களுமாகிய, மதிகேடர் - கெட்ட
மதியையுடையவர்கள், (தம் மனத்து அறிவிலாதவர்) மொழி -
சொற்களை. தஞ்சம் என - பற்றுக்கோடாகத்தக்கது என்று. என்றும்
- எந்நாளிலும். உணராத - நினையாத (அடியார்.) கருது -
தியானிக்கின்ற. சைவன் - சிவபெருமானின் (இடம் ஆம்.) அஞ்சு
புலன் வென்று - பஞ்சேந்திரங்களையும் வென்று. அறுவகைப்
பொருள் தெரிந்து - அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து.
ஏழு இசைக் கிளவியால் - சப்த சுரங்களையுடைய இசைப்
பாடல்களால் (வெம்சினம் ஒழித்தவர்கள்.) மேவி நிகழ்கின்ற -
விரும்பி வாழநின்ற (வேதிகுடி.)
|