3649. |
இலைத்தலை
மிகுந்தபடை யெண்கரம் |
|
விளங்கவெரி
வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்
வைத்தவழ கன்றனிடமாம்
மலைத்தலை
வகுத்தமுழை தோறுமுழை
வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை
யாடிநிகழ் கோகரணமே 4
|
4.
பொ-ரை: சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய
சூலப்படையை உடையவன். எட்டுக்கரங்களை உடையவன்.
நெருப்பைக் கையிலேந்தி
எண்தோள் வீசி நடனம் ஆடுபவன்.
தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத்
தாங்கியவன். அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும், சிங்கங்களும்,
பன்றிகளும், யானைகளும், கொம்பாற் கொல்லுதலையுடைய இளம்
பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும்
தலமாகும்.
கு-ரை:
இலைதலை மிகுத்தபடை - இலைபோன்ற
நுனியையுடைய சூலம் முதலிய பல ஆயுதங்களையேந்தி. எண்கரம்
எட்டுக்கைகளிலும் (விளங்க) எரி வீசி - நெருப்பை ஒளிவீச ஏந்தி.
முடிமேல் - தலையில். அலைத்து அலை தொகுத்த - மிகுந்த
அலைவீசுதலைக்கொண்ட. புனல் - கங்கைநீரை, செஞ்சடையில்
வைத்த அழகன்தன் இடமாம். மலைத்தலை வகுத்த - மலையின்
இடங்களில் அமைந்த. முழைதோறும் - குகைகள்தோறும். உழை -
மான்களும், வாள் அரிகள் - ஒளிபொருந்திய சிங்கங்களும். கேழல்
- பன்றிகளும். களிறு - யானைகளும். கொலைத்தலை - கொம்பாற்
கொல்லுதலையுடைய. மடப்பிடி - இளம் பெண்யானைகளும். கூடி விளையாடி. நிகழ் - வசிக்கின்ற
கோகரணம்.
|