3656. |
கோடலர
வீனும்விரி சாரன்மு
னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள்
பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு
மாள்வர்பர லோகமெளிதே 11 |
11.
பொ-ரை: காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற
அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை
இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடிகளைப் போற்றி, ஆராய்ந்து தமிழ்ச்சொற்களால் சீகாழியில்
அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப்
பாடவல்ல பக்தர்கள் அரசராகிய எல்லாத் திசையும் ஆள்வர். பின்
சிவலோகமும் எளிதில் அடைவர்.
கு-ரை:
கோடல் அரவீனும் - காந்தட்செடிகள் பாம்புபோல்
மலர்கின்ற. விரி - அகன்ற. சாரல் - மலைச்சாரல். முன் நெருங்கி -
முன் அணித்தாய் (தோன்ற) வளர் - வளம் பெருகும் கோகரணமே,
ஈடம் ஆக - இடமாக இனிது தங்குவான். அடிகள் பேணி -
ஆராய்ந்த தமிழ்ச் சொற்களால் இனிய இசைப்பாடல்களாகப்பாடிய.
ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்ல பத்தர்கள், அதன்
பயனாக எத்திசையும் ஆள்வர் - (அரசராகி) எல்லாத் திசையும்
ஆளுபவராவர். (பின்) பரலோகம் (உம்) - மேலான முத்தியுலகமும்.
எளிதில் அடைத்தகுவது ஆகும். ஈடம் - நீட்டல் விகாரம்.
|