3661. பூதபதி யாகியபு ராணமுனி
      புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக
     வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்க ளன்னமறை யாளர்கள்
     வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை யின்பமமர்
     கின்றவெழில் வீழிநகரே.               5

     5. பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என
விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான
தவக் கோலம் பூண்டவர். அவர் புண்ணிய தேவியாகிய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும்,
அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி, பிணி,
வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி,
நோயின்மை, செல்வம், பருவ மழை முதலிய நன்மை நிகழவும்,
மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும்.

     கு-ரை: பூதபதி ஆகிய - பூதங்களுக்குத் தலைவராகிய, புராண
முனி - பழமையாகிய தவக்கோலம் பூண்டவர். புண்ணியம் நல்மாதை
- அருளேயுருவமாகிய சிற்சத்தியை. பேதம் (அது) இலாதவகை -
வேறுபாடு இல்லாத விதம். மருவி - கலந்தும். மிக - வேறுபாடு
நன்குதோன்ற. பாகம் - இடப்பாகத்தில், வைத்த - வைத்தருளிய,
பெருமானது இடமாம். இல்லத்திலிருந்து அழலோம்பும் அந்தணர்கள்.
தகைமையால் - வனத்திற்சென்று தவம்புரியும் மாதவர்களைப்
போன்றவர்கள், அவர்கள் அழல் ஓம்புகின்றனர். அதனால் பசி,
பிணி, வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி,
நோயின்மை, செல்வம், பருவமழை முதலிய நன்மை நிகழவும் மாந்தர்
மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை என்பது பின் இரண்டடியின்
கருத்து.