3663. மந்திரநன் மாமறையி னோடுவளர்
       வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி யற்புத
     மெனப்படரு மாழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
     நீடுகதிர் விட்டவொளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினார்
     திருந்துபதி வீழிநகரே                7

     7. பொ-ரை: வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும்
வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து
அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த
மந்திரமலையைப்போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட
இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால்
விளைந்த இருளைப் போக்கி ஒளிரும். அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய்
விருப்பமுடையவர்களாய், மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம்
திருவீழிமிழலையாகும்.

     கு-ரை: மந்திரம்நல் மாமறையினோடு - நல்ல சிறந்த
வேதத்தின் மந்திரங்களுடன். வளர் - வளர்ந்த. வேள்வி மிசை -
யாகத்தில். மிக்க புகை போய் - மிக்கு எழும்பிய புகைசென்று.
அந்தரம் - மேலே. விசும்பு அணவி - ஆகாயத்திற் கலந்து.
அற்புதம் என - பகற்காலத்தே இருள்சூழ்ந்தது. அற்புதம் என்று
வியக்க. படரும் - படர்ந்ததனால் உண்டாகிய. ஆழி - ஆழ்ந்த -
இருள்வாய். மந்தரம் - மந்தர மலைபோன்ற. நல் - அழகிய.
மாளிகை - மாளிகையில். நிலவும் - (பதித்து) விளங்குகின்ற. மணி
- இரத்தினங்களின். நீடு - நெடுந்தூரம் பாயும். கதிர் - கிரணங்கள்.
விட்ட - வீசிய. ஒளி - பிரகாசம். போய் - சென்று. வெம்தழல் -
வெவ்விய தழலில் ஏற்றிய. விளக்கு என - விளக்கொளிபோல்.
(ஒளிபரப்பி) அவ்விருளைப்போக்க. அதனால் விருப்ப
முடையவர்களாய். திருந்து - திருப்திகரமாய் வாழ்கின்ற. பதி -
தலமாகிய வீழிமிழலையே.