3667. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
       வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன்
     விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி
     கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
     போகமொடி யோகமவரதே.            11

     11. பொ-ரை: பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும்,
நீண்ட சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில்
வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி. வெங்குறு
என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேதவல்லுநனான
ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள்,
அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை
அடைந்து, சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு
பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர்.

     கு-ரை: மத்தம் - பொன்னூமத்தை மலரும். மலி - வாசனை
மிகுந்த, கொன்றை - கொன்றைமாலையும், வளர்வார் சடையில்
வைத்த - வளரும் நெடிய சடையிலேயணிந்த, பரன் -
மேம்பட்டவனும், வீழி நகர் சேர் வித்தகனை -திருவீழிமிழிலை
ஆகிய தலத்தில் உள்ள சதுரனும் ஆகிய சிவபெருமானை.
வெங்குருவில் வேதியன், விரும்பு தமிழ் மாலைகள் வ(ல்)லார். சித்திர
விமானம் அமர் - அழகிய கோயிலையுடைய. செல்வம் மலிகின்ற.
சிவலோகம் மருவி - சிவலோகத்தையடைந்து. அத்தகு - அவ்வளவு
சிறந்ததாகிய. குணத்தவர்களாகி - சத்துவகுண முடையவர்களாகி. அனுபோகமொடு - இறைவனோடு பேரின்பம் உறும். யோகம்
அவரதே - சிவ யோகமும் தம்முடையதாகவே கைவரப் பெறுவர்.