3671. கொல்லைவிடை யேறுடைய கோவணவ
       னாவணவு மாலை
ஒல்லையுடை யானடைய லாரரண
     மொள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி
     மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய்
     தோணிபுர மாமே.                     4

     4. பொ-ரை: சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய
இடபவாகனத்தை யுடையவன். கோவண ஆடை அணிந்தவன்.
அடிய வர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை
உடையவன். தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும்,
சிவநாமமும் ஓதப்படும் பண்பினன். பகைவரது மதில்கள் எரிந்து
சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன். அப்
பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இறைவனையே
பற்றுக்கோடாகக் கொண்டு மேன்மேலும் பக்தி செய்கின்ற
தொண்டர்களின் வேண்டு கோள்களை ஏற்று, அவர்களின்
துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: கொல்லை - முல்லை நிலத்திலுள்ள, விடையேறு -
இடபவாகனத்தை. உடைய, கோவணவன் - கோவணமாகிய
ஆடைஉடைய துறவிக்கோலத்தினன். நா அணவும் மாலை -
(அடியார்கள்) நாவினாற் பாடும் பாமாலைகளின் (அணவுதல் -
பொருந்துதல் பூமாலையின் வேறு பிரிக்க இங்ஙனம் கூறப்பட்டது)
ஒல்லை உடையான் - ஓசையையுடையவன். ஒல் - ஒலிக்குறிப்பு;
அநுகரணஓசை என்பர். மேவி - தன்னையே பற்றுக்கோடாக
அடைந்து. வளர் - அன்புமிகப்பெறுகின்ற. (தொண்டரது) சொல்லை
- வேண்டிக்கொள்ளும் சொற்களை. அடைவு ஆக - (வியாஜமாக) வழியாகக்கொண்டு - இடர் - துன்பங்களை. தீர்த்து
அருள்செய்தோணிபுரம் (தலம்) ஆம். அடையலார் - பகைவரது.
அரணம் - புரங்களை. ஒள் அழல் விளைத்த - ஒளியையுடைய
நெருப்பால் எரித்த - விளைத்த என்ற சொல் சார்புபற்றி எரித்த
என்னும் பொருளில் வந்தது. வில்லையுடையான் - விற்போரையுடையவன். வில் - எரித்தற்குக் கருவியாக இன்மையால்
விற்போர் எனப்பட்டது. வில் - இலக்கணை. ஏறு - ஏறப்படுவது.
செயப்படுபொருள் உணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது.