3674. பண்ணமரு நான்மறையர் நூன்முறை
       பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை
     பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைக டீரவருள்
     செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர்
     தோணிபுர மாமே.                    7

     7. பொ-ரை: சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு
வேதங்களை அருளியவர். வேதாகம சாத்திரங்களின் முடிவான
கருத்தை, மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய
திருமார்பையுடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒருபாகமாகக் கொண்டவர். தமது பெருமை பேசும் அடியவர்களின்
தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன்
பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற
திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நூல்முறை பயின்ற திருமார்பின் - ஆகம
சாத்திரங்களின் கருத்தைப் பயின்ற (பயிற்றிய) மோன முத்திரையால்
சனகர் முதலியோர்க்குத் தெரிவித்தருளிய, திருமார்பினையும் -
(பயின்ற என்பதில் பிறவினை விகுதி தொக்கு நின்றது). பெண்
அமரும் - தங்கிய. மேனியர் - திருவுடம்பையும் உடையவர். தம்
பெருமை - தமது பெருமையை. பேசும் - பேசிப்புகழும் அடியார்.
மெய் - உள்பொருளாகிய. திண் அமரும் - வலிமைபொருந்திய
வல்வினைகள் - பிறரால் எளிதில் நீக்கமுடியாத வினைகள் (அல்லது வலிய வினைகளுக்குள் வலிமைபொருந்திய - மிக வலிய எனினும்
ஆம்.) சரியைத் தொழிலர் - சரியையாதி பணிபுரிவோர். சரியை
உபலக்கணம். "இருவரும் உணரா அண்ணல்... உரத்தில் சீர்கொள்
கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி." (கந்த
புராணம் மேருப்படலம். பா.12) துண் என விரும்பு - (எங்குக் குற்றம்
நேர்ந்து விடுகிறதோ என்று) அச்சத்தோடு விரும்பும், தொழிலர் -
பணியை மேற்கொண்டவர்கள் தங்கும் திருத்தோணிபுரம்.