3680. ஓமையன கள்ளியன வாகையன
       கூகைமுர லோசை
ஈமமெரி சூழ்சுடலை வாசமுது
     காடுநட மாடித்
தூய்மையுடை யக்கொடர வம்விரவி
     மிக்கொளிது லங்க
ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ
     தவளிவண லூரே.                     2

     2, பொ-ரை: ஓமை, கள்ளி, வாகை முதலிய மரங்கள்
நிறைந்ததும், கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன
கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில்
திருநடனம் செய்பவர் சிவபெருமான். தூய்மையான எலும்பும்,
பாம்பும் கலந்து ஒளி துலங்க, ஆமையோட்டினை ஆபரணமாக
அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஓமை கள்ளி, வாகை இம்மரங்களையுடையவனாகிய
இடங்களும், கூகை முரல் ஓசை - கோட்டான்கள் கத்தும் ஓசையும்.
ஈமம் - கொள்ளிகளும். எரி - நெருப்பும். சூழ் - சூழ்ந்த -
சுடலையாகிய, (வாசம் - தாம் வாசஞ்செய்யும்). முதுகாட்டில் நடம்
ஆடி. தூய்மையுடைய அக்கொடு - அக்குப்பாசியோடு அரவம் -
பாம்பும். (விரவி) கலந்து ஒளிமிக்கு. துளங்க - விளங்க. ஆமை
யோட்டோடு பூணும், அடிகள் உறைவது வளிவள்நல்லூரே. துளங்க
- துலங்க. லள ஒற்றுமை - அசைய எனினுமாம். சுடலையாகிய
முதுகாடு இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வாசம் -
இடைப்பிறவரல்.