3687. பொறிவரிய நாகமுயர் பொங்கணைய
       ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர்
     மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக
     நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ
     தவளிவண லூரே.                     9

     9. பொ-ரை: புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த
படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும்,
வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத, அதனால்
விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும், பிறர்க்கு அரிய
வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும்
செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பொறி - புள்ளிகளையுடைய. வரி - நெடிய. நாகம் -
பாம்பாகிய. உயர் - உயர்ந்த. பொங்கு - உடல் பெருக்கும். அணை
- மெத்தையை. அணைந்த - சேர்ந்த. புகழோன் - திருமால். வெறி -
வாசனையறிகின்ற. வரிய - கீற்றுக்களையுடைய . (வண்டு) அறைய -
வசிக்கின்ற. விழுமியோன் - பிரமன். அரிய செறிவு - பிறர்க்கு
அரியதாகிய வலிமையையுடைய. தோற்றம் ஓடு - தோற்றத்தோடு.
ஆற்றல் மிக நின்று, வினைமுடிக்கும் திறன்மிக. நின்று - (தேடும்
தொழிலில்) நின்றும் சிறிதேயும் (அவர்களால்) அறிவு அரியன் ஆய
- அறிய முடியாதவனாகிய. பெருமான் உறைவது அவளிவள்
நல்லூரே.