3693. கருகுபுரி மிடறர்கரி காடரெரி
       கையதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட
     வரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயி
     லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது
     வார்திருந லூரே.                    4

     4. பொ-ரை: சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர்,
சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர். தம்மைத்
தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக்
கொண்டவர். படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சோலைகளிலுள்ள
நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட, அவ்வாடலுக்குப்
பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள்
மரத்திலேறி, மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு
கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும்
திருநல்லூர் எனும் திருத்தலமாம்.

     கு-ரை: கருகுபுரி - கருகுதலையுடைய. (கறுத்த) மிடறர் -
கண்டத்தையுடையவர். காடு - காட்டில், கை அதனில் எரி ஏந்தி.
அருகு - சமீபத்தில். உரி அதளர் - உரித்த தோலையுடையவர். பட
அரவர். முருகு - வாசனை, (மயில்) ஆல - ஆட. திருகுசினம் -
மாறுபட்ட கோபம். இவ்வாடலுக்குப் பரிசில் வழங்கிலவேயென்று,
மரங்களின் மேற் சினந்த மந்திகள், அம் மரங்களினின்று கனிகளை
யுதிர்க்கும் திருநல்லூர் எனச் சோலைவளம் கூறியவாறு.