3699. கீறுமுடை கோவணமி லாமையிலொ
       லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள்
     வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி
     ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ
     யுந்திருந லூரே.                      10

    10. பொ-ரை: கிழித்த துணியும், கோவணமும் இல்லாமையால்
ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத்
துறவிகளும், அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக்
கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு
பொருட்டாக ஏற்க வேண்டா. சிவபெருமான் உமாதேவியை
உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி, தொன்றுதொட்டு
வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமானே முழுமுதற் கடவுள்
என்ற தெளிந்த உள்ளமும், அன்பும் உடையவர்களான
சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கீறும் - கிழிக்கப்படுகின்ற, உடை (அறுவை, துணி
என்னும் காரணப் பெயர் குறிப்பதையும் அறிக) உடையும்,
கோவணமும் இல்லாமையினால், ஒல் - ஆடையொலித்தல். ஓவிய -
நீங்கிய, தவத்தாராகிய சமணத் துறவிகளும். பாறும் உடல் -
அழியக்கூடிய உடலை, மூடு துவராடையர்கள் - உடற்பற்று
நீங்காதவராய்த் துவராடையால் போர்த்துக்கொள்ளும் புத்தத்
துறவிகளும், கொண்ட வேடத்தைக் கருதற்க. மடவாளொடு இனிது
எருது ஏறித் தொன்றுதொட்டிருந்த இடம், தேறும்-சிவனே
முழுமுதற்கடவுள் எனத்தெளிந்த, வாரம் - அன்பு.