3706. சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய,
       தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி
     பேணிட
முன்னைய முதல்வினை யறவரு ளினருறை
     முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி
     புறவமே.                           6

     6. பொ-ரை: இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க
தோத்திரங்களைச் சொல்பவர்களும், வேதங்கள் கடைப்பிடிக்கும்படி
கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும், வேதத்தின் பிற்பகுதியான
உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும்
வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே
என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும், தம் திருவடிகளைப்
போற்றி வழிபட, அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும்
ஆணவம், கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் பதியானது, பொன் முடிப்புப் போன்ற
புன்னையரும்பு, பொதியவிழ்வது போல மலர, அதிலிருந்து பொன்
போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: முன்னிரண்டடிகளிலும் வழிபடும் அடியார் திறன் கூறப் படுகிறது. சொல்நயம் உடையவர். நயம் - இனிய பொருள்களடங்கிய,
சொல் - தோத்திர மொழிகளையுடையவர். சுருதிகள் - வேதம்
முதலிய நூல்கள். கருதிய - கருதிச் சொல்லப்பட்ட. தொழிலினர் -
பணிபுரிபவர். பின்னையர் - பெரியோர்க்குப் பின் நின்று பணி
புரிவோர். இதனை "பூவொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர்பின்
புகுவேன்" என்ற அப்பர் திருவாக்காலும், "பிற்றைநிலைமுனியாது
கற்றல் நன்றே" என்ற புற நானூற்றாலும் அறிக. நடு உணர்
பெருமையர் - தூல பஞ்சாட்சரத்தில் நடு ஆகிய பதியின் தன்மையை உணரும் பெருமையர், வேதத்தின் நடுவில் பிரதிபாதிக்கப்படும்
பொருள் சிவனேயென்ற தன்மையை யுணரும் பெருமையர் எனினும்
ஆம். முன்னைய - தொன்றுதொட்டன ஆகிய மாயை, கன்மங்களும்.
முதல் - ஆணவமும்(ஆகிய) வினை - மலங்கள். ஈற்றடியில்,
புன்னையரும்பு பொன்முடிப்பாகவும், அதின் மகரந்தம் பொன்
ஆகவும், அது மலர்வது பொதியவிழ்வதாகவும் உருவகித்துச்
சோலைவளம் கூறியவாறு, சீகாழி கடலையடுத்திருப்பதால் நெய்தல்
வருணனையும் வயல் சூழ்ந்திருப்பதால் மருதவருணனையும், இவ்விரு
வருணனைகளும் பயில ஆங்காங்கு வருவது அறிந்து மகிழத்தக்கது.
இரண்டாம் அடியில் முரண்தொடை, நடு - சிவம்.