3708. வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை
       வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது
     நெரிவுற
ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர்
     வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி
     புறவமே.                           8

     8. பொ-ரை: வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற
இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான
இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித்
துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும், ஒளிவிட்டுப்
பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய
திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி
திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வசிதரும் உருவொடு - வாளேந்திய கோலத்தோடு,
(வசி - வாள்) மலர்தலையுலகினை - இடம் அகன்ற இவ்வுலகத்தை.
வலிசெயும் - தன் வலியால். துன்புறுத்திய. நிசிசரன்- அரக்கனாகிய
இராவணனது (நிசிசரன் - இரவிற் சஞ்சரிப்போன்) உடலொடும்,
நெடும்முடி ஒருபதும் - பத்துத் தலைகளும், நெரிவு உற - அரைவுற்று.
ஒசிதர - கசங்க, (ஒருவிரல்) நிறுவினர் - ஊன்றியருளியவர். வெளி
பொடி - வெண்மையை யுடையதாகிய திருநீறு. (வெள்+இ=வெளி-
வெண்மையையுடையது) "வெள்ளிப் பொடிப் பவளப் புறம்பூசிய
வித்தகனே" என்பதும் காண்க. (அப்பர் திருவிருத்தம்) சந்தம்
நோக்கி வெளியென நின்றது விகாரம். பொசிதரு - பூசப்பெற்ற,
திரு உரு உடையவர்.